என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
- அகதிகளாக வந்த அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
- தமிழகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து பாரதிதாசனிடம் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
ராமேசுவரம்:
இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
இதனால் அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்களில் பலர், அங்கு வாழவழியின்றி தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கினர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்தே பல தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலங்கையில் இருந்து வெளியேறி கடல் மார்க்கமாக படகுகளின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்தனர்.
இலங்கையில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழவழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு வந்ததாகவே அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் 'கியூ' பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அகதிகளாக வந்த அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக நேற்று இரவு தனுஷ்கோடி வந்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அவர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் தவித்தப்படி நின்றதை மீனவர்கள் பார்த்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்கள் அரிச்சல் முனைக்கு சென்று அதில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், ஒரு சிறுமி, ஒரு மூதாட்டி உள்ளிட்ட 5 பேரையும் மீட்டு மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த பாரதிதாசன்(வயது42), அவரது தாய் முனியம்மாள் (75), மகன்கள் பவனா புருசாந்தன் (17), பவனா அருள்(15), மகள் பவனா பிருந்திகா(10) என்பது தெரியவந்தது.
தமிழகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து பாரதிதாசனிடம் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி தனது குழந்தைகள் மற்றும் தாயுடன் வந்ததாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் இலங்கை அகதிகள் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கையில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 217 பேர் தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






