search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு அதிமுக-திமுக நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது
    X

    சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு அதிமுக-திமுக நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது

    • கொலையில் மூளையாக அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் செயல்பட்டிருப்பது தெரியவந்தது.
    • தொழிலாளி கொலை வழக்கில் அதிமுக-திமுக நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகாசி:

    சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்தன் என்கிற பார்த்திபன் (வயது 27), சுமைதூக்கும் தொழிலாளி.சிவகாசியில் கடந்த 2021-ம் ஆண்டு நவநீதகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பார்த்திபன் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கள்ளிபட்டியில் துரைப்பாண்டி (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அரவிந்தன் சிவகாசிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளை மறித்த ஒருகும்பல் அரவிந்தன், துரைப்பாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த துரைப்பாண்டி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் சிவகாசி முத்துராமலிங்கநகரை சேர்ந்த நாகராஜ் மகன் அருண்பாண்டியன் (31), மோகன் மகன் பார்த்திபன் (32), கண்ணன் மகன் முத்துக்கிருஷ்ணன் (23), சந்திரன் மகன் பழனி செல்வம் (37), கந்தசேகர் மகன் பாண்டியராஜ் (19), கணேசன் மகன் மாரீஸ்வரன் (19), செல்லத்துரை மகன் மதன் (32), நேருஜிநகர் ராமர் மகன் மாரீஸ்வரன் (27), ரிசர்வ்லைன் சிலோன் காலனி மகேஸ்வரன் மகன் ஹரிகுமார் (21) மற்றும் 18 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களை விசாரணை நடத்தியதில் அரவிந்தன் கொலையில் முக்கிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்த விசாரணை துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் உத்தரவிட்டார்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அரவிந்தன் கொலையில் மூளையாக அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் செயல்ட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நேற்று காலை போலீசார் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையின் போது போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நெருக்கமாக இருந்த மேலும் 4 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    விசாரணையின் முடிவில் கொலையில் தொடர்புடைய ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் , அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருமான லட்சுமிநாராயணன் (38), தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் பிரவீன் (35), தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் அந்தோணிராஜ் (35), முத்துராமலிங்கம் நகர் பொன்ராஜ் (25), சவுந்தர் (25), சமத்துவபுரம் காலனி ஜோதிலிங்கம் (22), ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் கூறுகையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 10 பேரின் அலைபேசிகளை சோதனையிட்டதில், கொலை வழக்கில் 6 பேருக்கும் தொடர்புள்ளது தெரிய வந்தது. எனவே ஆறு பேரையும் கைது செய்துள்ளோம் என்றனர்.

    கடந்த ஆண்டு நவநீத கிருஷ்ணன் கொலைக்கு பழிக்குபழியாக அரவிந்தன் கொலை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தொழிலாளி கொலை வழக்கில் அ.தி.மு.க.-தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×