என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி-40 பேர் படுகாயம்
- செந்துறையை அடுத்த பொய்யாதநலலூர் அருகே ராயம்புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
- தனியார் பேருந்து விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து துறையூரை நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டது. காலை நேரம் என்பதால் கூலி வேலை, கட்டிட வேலைக்கு செல்வோர் ஏராளமானோர் அதில் பயணம் செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.
இதற்கிடையே செந்துறையை அடுத்த பொய்யாதநலலூர் அருகே ராயம்புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.
மேலும் தற்போது அந்த பகுதியில் சாரலுடன் தொடர் மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாக காணப் படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வாகன போக்குவரத்து கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்தநிலையில் அப்பகுதியை துறையூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கடந்து சென்ற போது சாலைக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் சக்கரம் இறங்கியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.
விபத்துக்குள்ளான பஸ்சிலிருந்து அலறி அடித்துக் கொண்டு பயணிகள் வெளியேறினர். விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உதவினர். அவர்கள் பேருந்தின் மீது ஏறி பயணிகளை காப்பாற்றினர். மேலும் பேருந்தின் மீது ஏறி கண்ணாடிகளை உடைத்து காயங்களுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் செந்துறையை சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக் (வயது 20), உடல் நசுங்கி பேருந்துக்கு உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயங்களுடன் மீட்கப்பட்டவர்களை கொண்டு செல்வதற்காக, அப்பகுதியினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து காயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அப்பகுதியில் கடந்து சென்ற வாகனங்கள் உதவியுடன் அக்கம் பக்கத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த செந்துறை போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்து விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






