search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் கூகுள்பே மூலமாக ரூ.50 ஆயிரம் பறித்தவர் கைது
    X

    விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் கூகுள்பே மூலமாக ரூ.50 ஆயிரம் பறித்தவர் கைது

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரமணியில் உள்ள மற்றொரு விடுதிக்கு சென்ற வாலிபர் பணம் பறிக்க முயன்றுள்ளார்.
    • விடுதியில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு வாலிபரை பிடித்து தரமணி போலீசில் ஒப்படைத்தனர்.

    சென்னை:

    சென்னை தரமணியை அடுத்த திருவேங்கடம் நகரில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்து, அங்கு தங்கி இருப்பது போல நடித்து அனைவரிடமும் நன்றாக பேசியுள்ளார். முதல் தளத்தல் தங்கி இருப்பவர்களிடம் சென்று பேச்சு கொடுத்து அவர் தான் விடுதியில் புதிதாக சேர்ந்துள்ளேன். எனது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

    அவசரமாக மருத்துவ செலவுக்கு ரூ. 5 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும். எனது "கூகுள் பே" செயல்படவில்லை. நீங்கள் "கூகுள் பே"யில் பணம் அனுப்பினால் நான் ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து தருகிறேன் என்று பேசியுள்ளார்.

    இதனை நம்பிய விடுதியின் முதல் தளத்தில் தங்கி இருந்தவர்கள் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 5 ஆயிரம் அனுப்பி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து கீழ் தளத்தில் தங்கி இருந்தவர்களிடமும் புதிதாக வந்துள்ளேன். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன்' என நைசாக பேசி அவர்களிடமும் ரூ.5 ஆயிரம் "கூகுள் பே" மூலம் பறித்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தங்கும் விடுதியில் வசிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் உடனே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு ரூபாய் 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமாம். நான் ஏ.டி.எம். வாசலில் நிற்கிறேன். முன்னதாக அனுப்பிய அதே "கூகுள் பே"விற்கு ரூபாய் 40,000 அனுப்பி விடுங்கள். பணத்தை உடனே எடுத்து வருகிறேன் என கூறி உள்ளார். அதையும் நம்பிய விடுதியில் தங்கி இருந்த 4 பேர் ரூபாய் 40,000 அனுப்பி உள்ளனர்.

    நீண்ட நேரமாகியும் அந்த வாலிபர் வராததால் சந்தேகமடைந்த அவர்கள் விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்தனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த அந்த மோசடி நபரின் புகைப்படத்தை மற்ற விடுதிகளில் தங்கி உள்ள நண்பர்களுக்கும் அனுப்பி எச்சரிக்கையாக இருக்க கூறினர். இந்த மோசடி சம்பவம் குறித்து தரமணி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரமணியில் உள்ள மற்றொரு விடுதிக்கு சென்ற அந்த வாலிபர் அதேபோல் பேசி மோசடி வலைவிரித்து பணம் பறிக்க முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு அவரை பிடித்து தரமணி போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சச்சின்குமார் (22) என்பதும் அவருடைய கூகுள் பே வங்கி கணக்கை சோதனை செய்தபோது இதேபோன்று பலரிடம் பொய்யாக பேசி மோசடி செய்து பலரை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. பின்னர் சச்சின்குமார் மீது வழக்கு பதிவு செய்த தரமணி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×