என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ரவுடி
    X

    விழுப்புரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ரவுடி

    • புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவுவாசல் வளைவில் மரக்கிளை வழியாக ஏறி நின்றார்.
    • பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக அய்யனார் மிரட்டினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரியாபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார்.

    இவர் மீது திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மயிலம் போலீஸ் நிலையத்தில் உள்ளது. பிரபல ரவுடியான இவரை கோர்ட்டில் ஆஜராகும்படி தகவல் தெரிவிப்பதற்காக மயிலம் போலீசார் நேற்று அய்யனார் வீட்டுக்கு சென்றனர். அப்போது அய்யனார் அங்கு இல்லை. அவரது சகோதரி மட்டும் இருந்தார்.

    அவரிடம் போலீசார் அய்யனாரை உடனடியாக கோர்ட்டில் ஆஜராகும்படி தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் எடுத்து சென்றனர். இந்த தகவல் அய்யனாருக்கு தெரியவந்தது. எனவே அய்யனார் இன்று காலை விழுப்புரம் வந்தார்.

    அப்போது புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவுவாசல் வளைவில் மரக்கிளை வழியாக ஏறி நின்றார். அப்போது பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக அய்யனார் மிரட்டினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், செல்வராஜ் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அப்போது தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் நுழைவுவாயில் பகுதியில் ஏறினர். அப்போது லாவகமாக அய்யனாரை பிடித்து கீழே இறக்கினர். அதன் பின்னர் அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அய்யனாரை போலீசார் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் விழுப்புரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×