search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டியில் பிரபல கொள்ளையன் கைது- 4½ பவுன் நகை மீட்பு
    X

    பூதப்பாண்டியில் பிரபல கொள்ளையன் கைது- 4½ பவுன் நகை மீட்பு

    • கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
    • தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பெருவிளை பள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி மேரி கலா (வயது 32).

    இவர் தனது மகனுடன் அருமநல்லூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 11-ந்தேதி மொபட்டில் சென்று இருந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தபோது மேரிகலா கழுத்தில் கிடந்த 4½ பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்றார். இது குறித்து மேரி கலா பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது மேரிகலாவிடம் நகை பறித்த கொள்ளையன் குறித்த அடையாளங்கள் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் முட்டைக்காடு புது காலனி பகுதியைச் சேர்ந்த சிபு (வயது 33) என்பவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிபுவிடம் விசாரணை நடத்திய போது மேரிகலாவிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டார். கொள்ளையடித்த நகையை அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்து செலவு செய்ததாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டனர். கைது செய்யப்பட்ட சிபுவிடம் விசாரணை நடத்தியபோது அவர், தக்கலை பகுதியில் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர் மீது பழவூர், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி, சுசீந்திரம், மணவாளக்குறிச்சி, இரணியல் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிபு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வெளியே வந்து அவர் சென்னைக்கு சென்று உள்ளார். பின்னர் ஊருக்கு வந்த அவருக்கு செலவுக்கு பணம் இல்லை. இதனால் நகை திருடியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சிபுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×