என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் அருகே வாலிபர் சரமாரி குத்திக்கொலை- ரவுடி உள்ளிட்ட 5 பேர் வெறிச்செயல்
- ஆனந்தகுமார் கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள மருதுபாண்டி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் உள்ள மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
தந்தையின் டீக்கடையை கவனித்து வந்த ஆனந்தகுமார் அவ்வப்போது கூலி வேலைக்கும் சென்று வருவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவதானம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி மருதுபாண்டி என்பவரிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆனந்தகுமார் ரூ. 15 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
இதற்காக மாதந்தோறும் வட்டியும் செலுத்தி வந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஆனந்தகுமார் கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் மருதுபாண்டி நெருக்கடி கொடுத்து வந்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஆனந்தகுமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. செல்போனில் பேசி முடித்த பின்பு ஆனந்தகுமார் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
அவரது உறவினர்கள் ஆனந்த குமாரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கிைடயில் இன்று காலை சேத்தூர் மேற்கு பகுதியில் உள்ள பட்டு ராஜன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் இறந்துகிடப்பதாக சேத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அங்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது இறந்து கிடந்தவர் ஆனந்தகுமார் என தெரியவந்தது. அவரை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று நள்ளிரவு ஆனந்த குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மருதுபாண்டி அவரை வெளியே வருமாறு கூறியுள்ளார்.
வீட்டின் அருகில் இசக்கயம்மன் கோவில் பகுதிக்கு வந்த ஆனந்தகுமாரிடம் பணம் கேட்டு மருதுபாண்டி தனது கூட்டாளிகள் 4 பேருடன் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த மருதுபாண்டி மோட்டார் சைக்கிளில் ஆனந்தகுமாரை சேத்தூரில் உள்ள செங்கல் சூளைக்கு கடத்தி வந்துள்ளார்.
பின்னர் மருதுபாண்டி மற்றும் கூட்டாளிகள் உள்பட 5 பேர் ஆனந்தகுமாரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்தகுமார் கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள மருதுபாண்டி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






