என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடரும் கோடை மழை
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடரும் கோடை மழை

    • நெல்லை மாநகர பகுதியில் சுமார் அரை மணி நேரம் கனமழை கொட்டியது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ராதாபுரம், கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. ராதாபுரத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 8.8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கன்னடியன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பின்னர் இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு 60 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சேர்வலாறு அணை பகுதியில் 22 மில்லிமீட்டர் மழை பெய்தது. கன்னடியனில் 32 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகுதியில் 26 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    நெல்லை மாநகர பகுதியில் சுமார் அரை மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. அதில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. தொடர் மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதி அணையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. அடவி நயினாரில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் கனமழை பெய்தது. சிவகிரியில் 18 மில்லிமீட்டரும், சங்கரன்கோவிலில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்துவரும் கோடை மழை காரணமாக குற்றாலம் மெயினருவிக்கு நீர்வரத்து சற்று ஏற்பட்டுள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. ஒருசில இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடம்பூரில் அதிகபட்ச மாக 42 மில்லிமீட்டரும், கழுகுமலை, கயத்தாறில் தலா 34 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கோவில்பட்டி, எட்டயபுரம், சூரன்குடியிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவில்பட்டியில் பலத்த மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 56 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 49.5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    Next Story
    ×