search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே விளை நிலத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி வேன்: சாலை மறியல் - முற்றுகை போராட்டம்
    X

    விருத்தாசலம் அருகே விளை நிலத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி வேன்: சாலை மறியல் - முற்றுகை போராட்டம்

    • விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு வேன் அருகில் வந்தனர்.
    • காரில் இருந்து இறங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரிடம் சாலையை அகலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான வேன், இன்று காலை கோ.மாவிடந்தல் கிராமத்தில் இருந்து 6 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டது.

    இந்த வேன் கோ.மாவிடந்தலில் இருந்து மிகவும் குறுகலான சாலையில் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக சாலை ஓரத்தில் பள்ளி வேனை டிரைவர் நிறுத்தினார்.

    விளை நிலங்களுக்கு செல்லும் குறுகலான சாலையில் பள்ளி வேன் நின்றபோது, தொடர் மழையினால் ஈரப்பதத்துடன் இருந்த சாலையோர மண் சரிந்தது. இதில் வேன் மெல்ல மெல்ல சாய்ந்து விளைநிலத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்தது.

    இதனை சற்றும் எதிர்பாராத பள்ளி மாணவர்கள் அலறினர். அவ்வழியே சென்றவர்கள், விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு வேன் அருகில் வந்தனர். அதில் இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் டிரைவரை மீட்டனர். சாலையோரம் நிறுத்தப்பட்ட பள்ளி வேன் கவிழ்ந்ததால் சிறு காயங்களுடன் மாணவர்களும், டிரைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இத்தகவல் அறிந்த கோ.மாவிடந்தல் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். மிகவும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாலை அகலப்படுத்தப்பட்டிருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று குற்றஞ்சாட்டினர்.

    மேலும், விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவ்வழியே அரசு காரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் வந்து கொண்டிருந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரின் காரினை முற்றுகையிட்டனர். காரில் இருந்து இறங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரிடம் சாலையை அகலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர். சாலையோரம் உள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்க முன்வந்தால் சாலை அகலப்படுத்தப்படுமென அவர் கூறினார்.

    தொடர்ந்து மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் கோ.மாவிடந்தல் கிராம மக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலரும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×