என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் மாயமான 2 குழந்தைகளின் கதி என்ன? 54 பேர் கொண்ட குழுவினர் தேடுகிறார்கள்
    X

    கூடலூரில் மாயமான 2 குழந்தைகளின் கதி என்ன? 54 பேர் கொண்ட குழுவினர் தேடுகிறார்கள்

    • 2 குழந்தைகளும் பெற்றோரை தேடி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்பது தெரியவந்தது.
    • கூடலூர் தனிப்படை போலீசார் மாயமான குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 5 வயதில் மகன், 10 வயதில் மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 29-ந்தேதி தேன் எடுப்பதற்காக காட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டு பத்திரமாக இருக்கும்படி அறிவுரை கூறினர்.

    அதன்பிறகு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடமும் குழந்தைகளை பார்த்து கொள்ளும்படி கூறினர். தொடர்ந்து கணவனும், மனைவியும் காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    அங்கு தேன் எடுத்துவிட்டு அடுத்த நாள் காலை திரும்பி வந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த 2 குழந்தைகளையும் காணவில்லை. அவர்கள் மாயமாகி இருந்தனர்.

    எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனாலும் பலனில்லை.

    இதுதொடர்பாக கூடலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது 2 குழந்தைகளும் பெற்றோரை தேடி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் முதுமலை வனத்துறை ஊழியர்களுடன் இணைந்து நான்கு அணிகளாக பிரிந்து, அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மாயமான 2 குழந்தைகளையும் வலைவீசி தேடி வருகின்றனர். மொத்தம் 54 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனாலும் அவர்கள் காட்டுக்குள் சென்றதற்கான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. இருந்தபோதிலும் கூடலூர் தனிப்படை போலீசார் மாயமான குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×