search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை- மத்திய போலீசார் கட்டுப்பாட்டில் வந்த காந்திகிராம பல்கலைக்கழகம்

    • பல்கலைக்கழகத்தை சாராதவர்களுக்கு உள்ளே தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • ஹெலிபேடு தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புபடை பிரிவினர் காந்திகிராமம் வந்தனர். விழா அரங்கம், ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் மூலம் பிரதமர் வந்து செல்லும் பாதை ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன், திண்டுக்கல் டி.ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்பு பிரிவினர் ஆலோசனைகள் வழங்கினர். பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். பல்கலைக்கழகத்தை சாராதவர்களுக்கு உள்ளே தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஹெலிபேடு தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.

    பிரதமர் பங்கேற்கும் உள் அரங்கத்தில் பணிகள் முடிவடைந்தது. இதனைதொடர்ந்து இன்று முதல் மத்திய பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் தமிழக மந்திரிகள், அதிகாரிகள், பங்கேற்க உள்ளனர். இதனால் அமைச்சர் அர.சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    பட்டமளிப்பு விழாவில் பிரதமர்மோடி, முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றனர். பிரதமர் மற்றும் முதல்-அமைச்சர் வரும் காண்வாயில் பங்கேற்க அரசு சார்பில் 3 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் நவம்பர் 11-ந்தேதி ஹெலிபேடு தளம், காந்திகிராம பல்கலைக்கழகம், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி என 3 இடங்களில் தயார் நிலையில் இருக்கும். ஒரு குழுவில் 4 டாக்டர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நாளை ஒத்திகை நடைபெறும் என்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்திருந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி, முராஜிதேசாய், ராஜீவ்காந்தி என 4 பிரதமர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வரும் 5-வது பிரதமர் மோடி என்பதால் அவரது வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்வி பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 1976-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவித்தார். இதேபோல் பிரதமர் நரேந்திரமோடி இந்த நிகர்நிலை பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைகழகமாக நிலை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என கல்வியாளார்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×