என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் வாலிபர் எரித்துக்கொலை?- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
- 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. இதற்கு பின்பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த ராஜா சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான காலி மனை உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அந்த காலிமனை பகுதியில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய புகை வெளிவந்தது. இதையடுத்து அப்பகுதியினர் அருகில் சென்று பார்த்தபோது அங்கு உடல் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடனடியாக நிலத்தின் உரிமையாளர் ராஜா சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலுக்கு அருகிலேயே மண்எண்ணெய் கேன் ஒன்றும் கிடந்தது. எனவே நள்ளிரவில் அவரை யாராவது மர்ம நபர்கள் கடத்தி வந்து இங்கு வைத்து எரித்து கொலை செய்தார்களா? அல்லது அந்த வாலிபர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பிணமாக கிடந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அதே பகுதியில் யாராவது மாயமாகி உள்ளார்களா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.