என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்- பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி
    X

    விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்- பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி

    • பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது.
    • தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    இலங்கையில் தனி தமிழ் ஈழம் நாடு கேட்டு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக ஆயுத போராட்டம் நடத்தினார்கள்.

    கடந்த 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடைபெற்றது. அப்போது சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளிடம் ஆயுதம் பெற்ற இலங்கை ராணுவம் ஈவு இரக்கம் இல்லாமல் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றனர்.

    2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடந்த சண்டையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் இறந்து கிடப்பதுபோன்ற படத்தையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. இருப்பினும் பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் தான் இருக்கிறார் என பல்வேறு தமிழ் தேசிய தலைவர்கள் அவ்வப்போது கருத்து வெளியிட்டு வந்தனர்.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மை அறிவிப்பு என்ற தலைப்பில் தஞ்சாவூரில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழ் ஈழ தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

    இந்த சூழலில் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்,

    தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

    விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்த காலகட்டத்திலும், எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும், தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.

    தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்பு தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.

    இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக் ள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தஞ்சாவூர் விளார் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பகுதியில் பழ.நெடுமாறன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போரில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை தொடர்ந்து பல ஆண்டுகளாக இலங்கை ராணுவம் பரப்பி வந்தது. ஆனால் அது உண்மையல்ல. இன்று நான் ஈழ கவிஞர் காசி ஆனந்தன் முன்னிலையில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான நற்செய்தியை கூறி கொள்வதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

    நம்முடைய பிரபாகரன் சாகவில்லை. உயிருடன் தான் இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நான் தொடர்பில் உள்ளேன். அவர்களது அனுமதியுடன் தான் இந்த நல்ல செய்தியை தெரிவிக்கிறேன். இதன் மூலம் பிரபாகரன் மரணம் அடைந்தார் என்று திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளுக்கும், யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

    பிரபாகரன் தற்போது எங்கு உள்ளார் என்பதை அறிய ஈழ தமிழர்கள், உலக தமிழர்கள் போல் நானும் ஆவலாக தான் உள்ளேன். உரிய நேரத்தில் அவர் வெளிப்படுவார்.

    அப்போது அவருக்கு அனைத்து தமிழர்களும், தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் திரண்டு ஆதரவு கொடுத்து துணை நிற்க வேண்டும். அவரது தலைமையில் வலிமையான தமிழ் ஈழம் அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை. தமிழ் ஈழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க உள்ளார்.

    தற்போது இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை பொதுமக்கள் தூக்கி எறிந்து உண்மை நிலையை தெரிந்து கொண்டுள்ளனர். அங்கு சாதகமான சூழல் நிலவுவதால் தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவித்தேன். மேலும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ பொய். யூகங்களுக்கு என்னால் பதில் கூற முடியாது.

    இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி உள்ளது. இது இலங்கை நாட்டுக்கு பேராபத்து. அண்டை நாடான நமது நாட்டுக்கும் சீனாவால் ஆபத்து ஏற்படுவதை தடுக்க பிரதமர் மோடி உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் துரித நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஈழ கவிஞர் காசி ஆனந்தன், உலக தமிழர் பேரமைப்பு துணை தலைவர் அய்யனாபுரம் முருகேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக பிரபாகரன் உயிருடன் இருக்கும் செய்தியை அறிவித்து அனைவருக்கும் பழ.நெடுமாறன் இனிப்பு வழங்கினார்.

    Next Story
    ×