search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடநாடு கொலையாளிகளை தண்டிக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
    X

    கொடநாடு கொலையாளிகளை தண்டிக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

    • சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை காலை 10மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் முன்னிலை வகிக்கிறார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விசாரணை தொடங்கியது.

    பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார்? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.

    தி.மு.க. அரசு உரிய நடவடிக்கையை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் நாளை (1-ந் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை காலை 10-மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. வினர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

    இதையொட்டி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் அ.ம.மு.க. நிர்வாகிகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.

    அதன்படி ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் முன்னிலை வகிக்கிறார். மகிழன்பன், வி.என்.பி.வெங்கட்ராமன், எம்.எம்.பாபு, ராயபுரம் பி.எஸ்.சிவா, வழக்கறிஞர் எம்.வி.சதீஷ், ரெட்சன் அம்பிகா பதி, என்.கே.அச்சுதன் ஆகியோர் ஏற்பாட்டில் நடக்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி.தினகரன் இருவரும் இணைப்புக்கு பிறகு நடக்கும் முதல் போராட்டம் என்பதால் இதனை சிறப்பாக நடத்த வேண்டும் என இரு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    Next Story
    ×