search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் கொட்டிய கோடை மழை
    X

    நீலகிரியில் கொட்டிய கோடை மழை

    • கோத்தகிரியில் மழை வெளுத்து வாங்கியது.
    • கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பனி பொழிவு காணப்பட்டது.

    கோத்தகிரி:

    தமிழகம் முழுவதும் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இதேபோல மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தேயிலை செடிகள் கருகத் தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று ஊட்டி மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோத்தகிரியில் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கு மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோத்தகிரி மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு அதிகபட்சமாக 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று எடப்பள்ளியில் 25 மி.மீ, கோடநாட்டில் 23 மி.மீ, கேத்தியில் 24 மி.மீ. மழையும் பதிவாகி இருந்து.

    நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி இரு மாதங்கள் பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இம்முறை வட கிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை பெய்தது. மழை குறைந்தவுடன் உறைப்பனி பொழிவு அதிகரித்து. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஊட்டியில் உறைப்பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பனி பொழிவு காணப்பட்டது.

    ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல நாட்கள் ஐந்து டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை சென்றது. உறைபனி தாக்கம் மூன்று மாதமும் நீடித்த நிலையில், ஒரு சில பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் கருகின. இதனால், தேயிலை தொழில் பாதிக்கப்பட்டது. அதே போல் சில பகுதிகளில் காய்கறி தோட்டங்களும் பாதிக்கப்பட்டன. அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுத்த நிலையில், தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். அதேபோல சுற்றுலா பயணிகளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் பனியின் தாக்கம் குறைந்து இருந்தது. இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×