என் மலர்
உள்ளூர் செய்திகள்

எண்ணூர் துறைமுகம்- மாமல்லபுரம் இடையே 132 கி.மீட்டர் தூரத்துக்கு புதிய சாலை திட்டம்
- பொன்னேரி, மீஞ்சூர் நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்பு உள்ளது.
- புதிய சாலை திட்டப் பணிகளை 2025, ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
பொன்னேரி:
எண்ணுார் துறைமுகம் மற்றும் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், சென்னை நகரப் பகுதிக்குள் நுழையும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வர்த்தக வாகனங்களும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எண்ணுார் துறை முகத்திற்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை எல்லை சாலை திட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது எண்ணுார் துறைமுகத்தில் தொடங்கி, தச்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்பதுார், சிங்கபெருமாள்கோவில், மாமல்லபுரத்தில் முடியும் வகையில், புதிய சாலைத் திட்டம், 132.8 கி மீ., தூரத்திற்கு, 5 பிரிவுகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து, சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூரில் முடியும் வகையில், 25.40 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
ஜப்பான் நிறுவனத்தின் நிதியுதவியுடன், மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. முதல் பிரிவு சாலை, எண்ணுார் துறைமுகத்தில் தொடங்கி, காட்டுப்பள்ளி, கல்பாக்கம், நாலுார், வன்னிப்பாக்கம், நெடுவரம்பாக்கம், பஞ்செட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று, தச்சூரில் முடிகிறது. இதற்காக, 605 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது செயல்பாட்டில் உள்ள, மீஞ்சூர்- வண்டலூர் வெளி வட்ட சாலையில் இருந்து, இணைப்பு சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, சென்னை எல்லை சாலையுடன் இணைக்கப்பட உள்ளது.
மீஞ்சூர்- அனுப்பம்பட்டு இடையே, ரெயில்வே மேம்பாலம் ஒன்றும், மீஞ்சூர்- காட்டூர், மீஞ்சூர் -பொன்னேரி உட்பட 7 இடங்களில் மேம்பாலங்களும் கட்டப்பட உள்ளன.
வாயலுார், அக்கரம்பேடு, மேட்டுப்பாளையம், ஆமூர், பஞ்சட்டி ஆகிய இடங்களில், சிறிய மேம்பாலங்களும் கட்டப்பட இருக்கிறது.
மேலும் சாலையின் இருபுறமும் மழை நீர் கால்வாய்கள், மைய தடுப்புகள் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எல்லைகளை வரையறுக்கும் வகையில், சிவப்பு கொடி கட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை அமையும் இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, நிலங்களை சமன்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது, பாலங்கள் அமையும் இடங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
புதிய சாலை திட்டப் பணிகளை 2025, ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம், சென்னை நகரில் மட்டுமின்றி, பொன்னேரி, மீஞ்சூர் நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த சாலைக்காக, 1,266 பேரிடம் இருந்து, 605 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த சாலைப் பணி திட்ட மிட்டப்படி, 3 ஆண்டிற்குள் முடிக்கப்படும். இதன் மூலம், மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். அடுத்தடுத்த பிரிவுகளின் பணிகள் முடியும்போது, சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்" என்றார்.