என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை
- மூலக்கரைப்பட்டியில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- காயல்பட்டினம், திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மதியத்திற்கு பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் ஒரு வாரமாக மாலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மழையால் சாலையோர பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
மாவட்டத்தை பொறுத்தவரை அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி, மீரான்குளம் வரையிலும் சுமார் 1 மணிநேரம் மழை பெய்தது.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் 8.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 1.20 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் அதிகபட்சமாக 17 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
கன்னடியன் கால்வாய் பகுதியில் 14.80 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நம்பியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக சாரல்மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அங்கு 26 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 23 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே அங்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணை பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை கருப்பாநதி அணை பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ராமநதியில் 4 மில்லிமீட்டரும், குண்டாறில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி சுற்றுவட்டார பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. குற்றாலத்தில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மாவட்டம் முழுவதும் பகலில் வெயிலும், மாலையில் மழை என்ற நிலை இருந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், காடல்குடி, விளாத்திகுளதம், காயல்பட்டினம், திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எட்டயபுரத்தில் 13.2 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 8.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.






