search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக மக்களின் நலனுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார்: முத்தரசன்
    X

    தமிழக மக்களின் நலனுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார்: முத்தரசன்

    • காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
    • 2014ல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜ.க. பொறுப்பேற்று 10 ஆண்டு காலம் ஆகியும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    அதற்கு மாறாக விலைவாசி நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கட்டுப்படுத்துவதற்கு எந்தவித முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. பிரதமர் செல்லும் இடங்களில் குடும்ப அரசியல் மற்றும் ஊழலை பற்றி மட்டுமே பேசுகிறார்.

    ஊழலை பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக பலம் இருக்கிறதா என்பதை அவர் யோசிக்க வேண்டும். ஊழல், வேலையில்லா திண்டாட்டம் இதையெல்லாம் கண்டித்து வருகிற செப்டம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

    12-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 13 ,14 இரு நாட்களில் வட்ட மற்றும் ஒன்றிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    தமிழ்நாடு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டி அரசாங்கத்தையும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையாக உள்ளது.

    அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பூர்த்தி செய்ய வேண்டும், ஆனால் அரசை செயல்படுத்த முடியாத நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்து குடியரசுத் தலைவரிடம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முறையீடு செய்துள்ளார்கள்.

    ஆனால் இதுவரை குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஏட்டிக்கு போட்டியாக தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில் கவர்னரின் நடவடிக்கை உள்ளது.

    கவர்னரை கண்டித்து தமிழ்நாட்டு நலன் கருதி கவர்னரின் அராஜகத்தை கண்டித்து மக்களே வெகுண்டெழுந்து போராட வேண்டிய நிலைமை ஏற்படும். இது போன்று ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு கவர்னரும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. 25-ம் தேதி முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி 25-ம் தேதி அவரவர் தொகுதியில் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்.

    நாட்டிலேயே மிக மோசமான முறையில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் உயிர் உடமை பாதுகாப்பில்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது. கடற்கொள்ளையர்களாலும் பொருட்கள் களவாடப்படுகிறது.

    2014ல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார். இலங்கையுடன் நல்ல நட்பில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×