என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.ம.மு.க. பிரமுகர் கொலையில் சென்னை கூலிப்படையினர் மேலும் 3 பேர் கைது
    X

    அ.ம.மு.க. பிரமுகர் கொலையில் சென்னை கூலிப்படையினர் மேலும் 3 பேர் கைது

    • கோதண்டத்தை காரில் கடத்தி சென்று கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
    • ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (வயது 68) பட்டு சேலை வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் மாவட்ட அவை தலைவராக பதவி வகித்தார்.

    ஆகாராம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இருவருக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

    இதனால் சரவணன் கோதண்டத்தை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இது குறித்து அவரது டிரைவர் குமரன் என்பவரிடம் கூறினார்.

    இருவரும் சேர்ந்து சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் குட்டி என்கிற தணிகாலத்தை தொடர்பு கொண்டனர். அவர் இந்த கொலைக்கு ரூ.10 லட்சம் வரை பேரம் பேசினார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் அவரிடம் கொடுத்தனர்.

    கடந்த 5-ந் தேதி செய்யார் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த கோதண்டத்தை காரில் கடத்தி சென்று கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.

    பின்னர் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள தெலுங்கு கங்கை கால்வாயில் உடலை வீசி சென்று விட்டனர்.

    கோதண்டம் மாயமானது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கொலை செய்து வீசப்பட்டது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து சரவணன், டிரைவர் குமரன் சென்னை குன்றத்துரை சேர்ந்த கூலிப்படை தலைவன் குட்டி என்கிற தணிகாசலம், நேருஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னையில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.நேற்று கூலிப்படையை சேர்ந்த ஸ்ரீதர் (34), வீரமணி (31), வினோத் (24) ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×