search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் கூவம் கரையோர மக்களுக்கு 2.60 லட்சம் கொசுவலைகள்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்
    X

    சென்னையில் கூவம் கரையோர மக்களுக்கு 2.60 லட்சம் கொசுவலைகள்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்

    • வடசென்னையில் 36 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது.
    • அதிக மழைப்பொழிவு இருந்த போதிலும் 2 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. மற்ற இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை.

    சென்னை:

    சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தற்போது மழை நீர் முழுமையாக வடிந்து விடுகின்றன. கனமழையின் போது தேங்கிய பகுதிகளில் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் மழை நீர் எந்த இடத்திலும் தேங்கவில்லை.

    மழைநீர் வடிந்து விடுவதால் தற்போது கொசு மற்றும் மழைக்கால நொய் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது. கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் போன்றவை பரவாமல் தடுக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுளது.

    ராயபுரம் மண்டல அலுவலகத்தில் கொசு ஒழிப்பு பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    வடசென்னையில் 36 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது. அதிக மழைப்பொழிவு இருந்த போதிலும் 2 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. மற்ற இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் வடிகால் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகளை செய்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் உடனடியாக வடிந்துள்ளது. இப்போது எங்கும் மழை நீர் தேங்கி நிற்கவில்லை.

    சேரும், சகதியுமாக இருந்த இடத்தில் கூட அவற்றை அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. கால்வாய் அடைப்புகளை நீக்கி வருகிறோம்.

    மேலும் நீர்நிலைப் பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்கள் கொசுக்களால் பாதிக்கக்கூடாது என்பதற்காக கொசுவலைகள் இலவசமாக வழங்கி வருகிறோம்.

    சென்னை மாநகராட்சியில் இருப்பில் உள்ள 2.60 லட்சம் கொசு வலைகள் வழங்கப்படுகிறது. அந்த பணிகளை இன்று தொடங்கி உள்ளோம். எங்கெல்லாம் நீர் நிலைகள் இருக்கின்றதோ அந்த பகுதிகளுக்கு அதிகமாகவும் நகர்ப்புற மக்களுக்கு குறைவாகவும் வழங்கப்படும்.

    அடுத்த கட்டமாக கொசு ஒழிப்பு பணியும் தொடங்கியுள்ளது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்காத வகையில் படகுகள் மூலமும், எந்திரங்கள், மூலமும் கொசு மருந்துகள் தெளிக்கப்படுகன்றன. வீடுகளிலும் மருத்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். 247 கி.மீ. கால்வாய்களில் அனைத்து பகுதிகளிலும் இந்த பணி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கலாநிதி வீராசாமி எம்.பி., ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×