என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
- ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
- ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் கொட்டுகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்யும் மழையால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 70 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து 10-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கும் நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர் மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 500 கன அடியும், 16 கண் மதகு வழியாக 53 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மொத்தம் 75 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாருர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய காவிரி கரையோரத்தில் உள்ள 11 மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.