search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

    • காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
    • ஆபத்தை விளைவிக்கும் வகையில் காவிரி கரைக்கு செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே அந்த அணைகள் நிரம்பி உள்ளதால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து 87 ஆயிரம் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வருகிறது.

    ஒகேனக்கலில் நேற்று காலை 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. அருவிகளுக்கு செல்லும் நடை பாதையில் 3 அடிக்கும் மேல் தண்ணீர் செல்கிறது.

    ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 25-வது நாளாக தடை நீடிக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஓகேனக்கல் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய், உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் ஆர்ப்பரித்த படி வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்தது.

    மேட்டூர் அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 77 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 500 கனஅடியும் என மொத்தம் 2 லட்சத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் மேட்டூர் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அப்படியே காவிரி ஆற்றில் உபரிநீராக வெளியேற்ற அதிகாாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் மேலும் காவிரியில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். மேலும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் காவிரி கரைக்கு செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பட்டி உள்பட காவிரி கரையோர பகுதிகளுக்கு பொது மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் காவிரி கரையோர பகுதிகளான சேலம், நாமக்கல், ஈேராடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களிலும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்தந்த பகுதி வருவாய்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகர், கலைமகள் தெரு, மற்றும் மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அங்குள்ள பொதுமக்கள் அருகில் உள்ள நகராட்சி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற மறுத்து வீட்டிலேயே வசித்து வருகின்றனர். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    பள்ளிப்பாளையம் பகுதியில் சுமார் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆவாரங்காடு, சந்தைப்பேட்டை, பாவடி தெரு, சத்யாநகர்,ஜனதா நகர் நாட்டகவுண்டம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் இரவோடு இரவாக மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் நகராட்சி சார்பாக திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி இந்திராநகரில் சுமார் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினரும் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு விரைந்துள்ளார்கள்.

    Next Story
    ×