என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
- டெல்டா மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது.
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 500 கன அடி தண்ணீர் கூடுதலாக விட முடிவு செய்தனர்.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 1200 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,373 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,223 கன அடியாக சரிந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களாக மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
தற்போது கோடை காலம் தொடங்கியதை அடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை மாவட்டங்களில் வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது. குறிப்பாக சேலத்தில் சராசரி 98.96 டிகிரி செல்சியஸ் வெயிலும், நாமக்கல்லில் 96.8 டிகிரி செல்சியஸ் வெயிலும் பதிவாகிறது.
வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் குடிநீர் அருந்துகின்றனர். இதனால் டெல்டா மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 500 கன அடி தண்ணீர் கூடுதலாக விட முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 8.30 மணியில் இருந்து 1500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 103.45 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 103.44 அடியாக சரிந்தது.






