search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாலி எடுத்து கொடுக்க வேண்டிய நாட்டாமை இல்லாததால் திருமணம் நிறுத்தம்
    X

    தாலி எடுத்து கொடுக்க வேண்டிய நாட்டாமை இல்லாததால் திருமணம் நிறுத்தம்

    • சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த தனிப்படை போலீசார், சங்கரை மடக்கி அரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
    • திருமணம் நின்று போனதால் மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. குருமலை அடுத்துள்ள அணி மலை கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த மலை கிராமத்தின் நாட்டாமையாக சேகர் என்கிற சங்கர் உள்ளார். இவரது அண்ணன் மகனின் திருமணம், அணி மலையில் நேற்று நடைபெற இருந்தது.

    இதற்காக நாட்டாமை சங்கர் தனது குடும்பத்தினருடன் திருமண விழாவிற்கு தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 5-ந்தேதி ஊசூர் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த தனிப்படை போலீசார், சங்கரை மடக்கி அரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் சங்கர் மீது சாராயம் காய்ச்சி விற்றதாக வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    இதையறிந்த அப்பகுதி மக்கள், எங்கள் வழக்கப்படி திருமணத்தின்போது நாட்டாமை தான் மணமகனிடம் தாலி எடுத்து கொடுப்பார். அப்போது தான் திருமணத்தை நடத்த முடியும்.

    எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் சங்கரை விடுவிக்கவில்லை.

    இதற்கிடையில் அத்தியூர் ஊராட்சி தலைவரும், அணி மலை மக்களும் சேர்ந்து நாட்டாமை சங்கரை திருமணத்துக்கு ஜாமீனில் அழைத்து வர முயற்சித்தனர். ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

    இதனால் மலை கிராம வழக்கப்படி மணமகன் கையில் தாலி எடுத்து கொடுக்க நாட்டாமை இல்லாத நிலையில் நேற்று நடைபெற இருந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிறுத்தி விட்டனர்.

    திருமணம் நின்று போனதால் மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×