search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் கடல் சீற்றம்: 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X

    கடலூரில் கடல் சீற்றம்: 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    • கடலூர் மாவட்டத்தில் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் நிலையில் சுமார் 6 அடிக்கு மேல் கடல் அலைகள் உயர்ந்து மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது.
    • கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளதால் அதன் தொடர்ச்சியாக கடல் நீர் தற்போது வழக்கத்தை விட சுமார் 30 அடிக்கு மேல் வந்து செல்கின்றது.

    கடலூர்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இதில் புயலுக்கு மாண்டாஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

    மேலும் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றி இருந்த நிலையில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு புயல் உருவாகி உள்ளது என்பதனை அறிவித்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் நிலையில் சுமார் 6 அடிக்கு மேல் கடல் அலைகள் உயர்ந்து மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது. மேலும் கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளதால் அதன் தொடர்ச்சியாக கடல் நீர் தற்போது வழக்கத்தை விட சுமார் 30 அடிக்கு மேல் வந்து செல்கின்றது.

    மேலும் கடலூர் தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக 30 அடிக்கு முன்பு நிறுத்தப்பட்ட இடத்திற்கு கடல் அலை வந்து செல்வதால் மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அவசர அவசரமாக படகுகளை சற்று முன்னோக்கி கொண்டு செல்வதையும் காண முடிந்தது.

    இன்று முதல் கடல் பகுதியில் காற்றின் வேகமும், அலையின் சீற்றமும் அதிகரிக்கும் என்ற நிலையில் தற்போது கடல் அலை வழக்கத்தை விட அதிக அளவில் முன்னோக்கி வருவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் சமயத்தில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் மீனவர்கள் இருந்து வருகிறார்கள்.

    மேலும் கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக லேசான காற்றும் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×