என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நபர்- வனத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்
    X

    வனத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நபர்- வனத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்

    • லோகன் வீட்டிற்கு வந்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வனசரக அலுவலர் செங்கோட்டையன் தலைமையில் வனவர் ஆறுமுகம், வனக்காப்பாளர்கள் ஹரி விக்னேஷ், கோபால் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் விளாமுண்டி மேற்கு காவல் சுற்றுக்கு உட்பட்ட ஒற்றைப்பனை மரக்காடு பகுதியில் விளாமுண்டி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதியில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட கருவேல், உசில் போன்ற 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு இருப்பதும், அங்கு விவசாயம் செய்வதற்காக நிலத்தில் உழவு பணிகள் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்த போது அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் லோகன் என்பவர் மரங்களை வெட்டி அகற்றி விட்டு வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து லோகனை கைது செய்ய முயன்ற போது அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து லோகன் தப்பி ஓடி தலைமுறையாகி விட்டார்.

    இந்நிலையில் லோகன் வீட்டிற்கு வந்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வனசரக அலுவலர் செங்கோட்டையன் தலைமையில் வனவர் ஆறுமுகம், வனக்காப்பாளர்கள் ஹரி விக்னேஷ், கோபால் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர்.

    வனத்துறையினரை கண்டதும் லோகன் தப்பியோட முயன்றார். வனத்துறையினர் லோகனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது திடீரென லோகன் வனத்துறையினரை தாக்கி தப்பியோட முயன்றார்.

    ஆனால் வனத்துறையினர் லோகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    லோகன் மீது சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல், காவல்துறையினரை மிரட்டியது, மான் வேட்டை ஆடியது, மீன் கடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    Next Story
    ×