search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி, கல்லூரி மாணவனுடன் ஓட்டம்:  விஷம் குடித்த வாலிபரின் தந்தை மரணம்- தாயுக்கு ஆஸ்பத்திரியில்  சிகிச்சை
    X

    சிறுமி, கல்லூரி மாணவனுடன் ஓட்டம்: விஷம் குடித்த வாலிபரின் தந்தை மரணம்- தாயுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    • கடந்த 5-ந்தேதி தமிழ்செல்வன் வீட்டிற்கு சிறுமியின் உறவினர்கள் சென்றனர்.
    • அக்கம்பக்கத்தினர் உடனே கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே மொள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது55). விவசாயியான இவருக்கு சாலம்மாள் (48) என்ற மனைவியும், தமிழ்செல்வன் (21) என்ற மகனும், மஞ்சுளா என்ற மகளும் உள்ளனர்.

    தமிழ்செல்வன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுமியும், தமிழ்செல்வனும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    காதல் விவகாரம் குறித்து இருவர் வீட்டாருக்கும் தகவல் தெரிந்தால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதி மாணவன் தமிழ்செல்வனும், சிறுமியும் பயந்து வீட்டைவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிறுமி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனையும், சிறுமியையும் தேடி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 5-ந்தேதி தமிழ்செல்வன் வீட்டிற்கு சிறுமியின் உறவினர்கள் சென்றனர். அங்கு அவரது தந்தை கோவிந்தனையும், தாய் சாலம்மாளையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும், ஆத்திரம் தீராத சிறுமியின் உறவினர்கள் கோவிந்தனின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

    இதனால் செய்வதறியாது பயத்தில் இருந்த கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சாலம்மாள் ஆகிய 2 பேரும் கடந்த 7-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தனர்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் ஷெரீப் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த கோவிந்தனிடம் விசாரணை நடத்தினார்.

    இதில் தனது மகன், சிறுமியை காதலித்ததால், அவர்கள் இருவரும் ஊரை விட்டு சென்று விட்டதாகவும், இதற்காக சிறுமியின் உறவினர்களான மாது, பெருமாள், குமார் மற்றும் ஒரு நபர் ஆகிய 4 பேர் எனது வீட்டிற்கு வந்து என்னையும், எனது மனைவி சாலம்மாளை தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    அதன்பின்னர் 4 பேரும் சேர்ந்து எனது வீட்டின் ஜன்னல், கதவுகளை அடித்து நொறுக்கினர். பயத்தில் தற்கொலை செய்வதற்காக நாங்கள் விஷம் குடித்து மயங்கி கிடந்தோம் என்றார்.

    இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளையும் தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமியின் உறவினர்களான மாது, குமார், பெருமாள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான சிறுமியையும், மாணவன் தமிழ்செல்வனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மொள்ளம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×