என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டு யானை தாக்கி முதியவர் பலி- உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்
    X

    காட்டு யானை தாக்கி முதியவர் பலி- உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்

    • நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அல்லூர் வயல் கிராமம் உள்ளது.
    • இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அல்லூர் வயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வாடிக்கையாகி வருகிறது.

    அல்லூர் வயல் கிராமத்தை சேர்ந்தவர் கரும்பன்(70). இன்று காலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென கரும்பனை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரும்பனின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். கரும்பனின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து அழுதனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து உடலை எடுக்க சென்றனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, பலமுறை ஊருக்குள் யானை வருகிறது என கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது உயிரிழப்பு சம்பவம் நடந்து விட்டது. இனி இதுபோன்று நடக்காமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×