என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்கள்-உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
- கரூர் நகரில் அமைந்துள்ள ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- ஜவுளி நிறுவனங்களில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
கரூர்:
கரூரை தலைமை இடமாகக் கொண்டு சிவா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை சரவணன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு சொந்தமான தனியார் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர்.
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் நகரம், குளித்தலை மற்றும் சேலம், திருப்பூர், ஊட்டி உட்பட பல்வேறு ஊர்களில் இந்த ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான கிளைகள், வீடு மற்றும் அலுவலகங்களிலும் இந்த அதிரடி சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு ஊர்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு, வருமானம் தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கரூர் நகரில் அமைந்துள்ள ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜவுளி நிறுவனங்களில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
கரூர் நகரில் அமைந்துள்ள கடை, குடோன், வீடு மற்றும் குளித்தலையில் அமைந்துள்ள ஜவுளிக்கடை என நான்கு இடங்களிலும் சேலம், திருப்பூர், ஊட்டி ஆகிய கிளைகள் உட்பட மொத்தம் ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதேபோல் விழுப்புரம் மகாலட்சுமி பிளாசாவில் உள்ள ஜவுளி நிறுவனம், கடலூரில் இம்பீரியல் சாலையில் உள்ள உள்ள கே.வி.டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி நிறுனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






