search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் 3-வது நாளாக சோதனை: கட்டுமான நிறுவனங்களின் பங்குதாரரிடம் ரகசிய இடத்தில் விசாரணை
    X

    மதுரையில் 3-வது நாளாக சோதனை: கட்டுமான நிறுவனங்களின் பங்குதாரரிடம் ரகசிய இடத்தில் விசாரணை

    • 2 நாள் சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டு உள்ளன.
    • வருமான வரி அதிகாரிகளின் இடைவிடாத சோதனை, 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அவனியாபுரம்:

    மதுரையில் அவனியாபுரம், கோச்சடை, ஊமச்சிகுளம் உள்பட 10 இடங்களில் கிளாட்வே சிட்டி, அன்னை பாரத், ஜெயபாரத், கிரீன் சிட்டி ஆகிய கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் மண்டல புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி செந்தில்வேலன் அடங்கிய 50 பேர் குழுவினர், கடந்த 20-ந்தேதி காலை 7 மணி அளவில் மேற்கண்ட 10 இடங்களிலும் அதிரடி சோதனையை தொடங்கினார்கள். அப்போது அந்த நிறுவன பங்குதாரர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காண்ட்ராக்டர் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தினர். இதன் விளைவாக அங்கு கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பற்றிய விவரங்கள் தெரியவந்தது.

    இது தொடர்பாக கட்டுமான நிறுவன பங்குதாரர்களிடம் இன்று அதிகாலை வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே மேற்கண்ட 10 இடங்களிலும் கைப்பற்றப்பட்டு உள்ள ஆவணங்கள், 2 ஹார்ட் டிஸ்க்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன. இன்னொருபுறம் தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப்பணியில் ஈடுபடுவதற்காக சென்னையில் இருந்து மதிப்பீட்டுக்குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

    மதுரை கட்டுமான நிறுவன பங்குதாரர்களுக்கு சொந்தமான 12 வாகனங்களின் ஆவணங்கள், வருமான வரி தாக்கல் செய்த கணக்குகளுடன் ஒப்பு நோக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

    மதுரையில் 2-வது நாளாக நடந்த சோதனையில் கட்டுமான பங்குதாரர் முருகன், ஜெயக்குமார் ஆகியோர் வீட்டில் தற்போது வரை கணக்கில் காட்டப்படாத ரூ.72 கோடி ரொக்கப் பணம், சுமார் 20 கிலோ தங்கம்-வைர, நகைகள் மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே மதுரை கட்டுமான நிறுவன பங்குதாரர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இன்று அதிகாலை 2 கார்களில் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    2 நாள் சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் வருமான வரி அதிகாரிகளின் இடைவிடாத சோதனை, 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த சோதனையின் போது மதுரை அவனியாபுரத்தில் உள்ள ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டியின் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான முருகன் என்பவரின் வீட்டில் இருந்து பலகோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×