search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடர்மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடர்மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

    • தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்பட்டது.
    • தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, குண்டாறு, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்க ளில் கடந்த சில நாட்க ளாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதற்கிடையே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை கார ணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.

    நேற்று மாலை முதலே நெல்லை மாநகர் பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகப்பட்சமாக பாளையங்கோட்டையில் 38 மில்லி மீட்டரும், நெல்லையில் 30.6 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 20 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 18.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதுபோல சேர்வலாறு, சேரன்மகாதேவி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, நம்பியாறு பகுதி, கொடுமுடியாறு உள்பட மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்தது.

    தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்பட்டது.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகப்பட்சமாக எட்டயபுரத்தில் 45.4 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 29 மில்லி மீட்டரும், கயத்தாறில் 21 மில்லி மீட்டரும், கழுகுமழையில் 20 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    மேலும் கடம்பூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஸ்ரீவை குண்டம், காயல்பட்டினம், விளாத்திகுளம், காடல்குடி, வைப்பாறு, சூரன்குடி, வேடநத்தம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    உடன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன் காடு, கொட்டன்காடு, கந்தபுரம், நேசபுரம், செட்டியாபத்து, தண்டுபத்து சீர்காட்சி, பிச்சிவிளை, பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், வாகைவிளை, வேப்பங்காடு, மெஞ்ஞான புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது.

    ஓட்டப்பிடாரம் வட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் வயல்களில் களை எடுக்க முடியாமலும், களை கொல்லி மருந்து அடிக்காமலும் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கருப்பாநதி பகுதியில் 37 மில்லி மீட்டரும், கடனா நதியில் 18 மில்லி மீட்டரும், அடவி நயினார் பகுதியில் 15 மில்லி மீட்டரும், சிவகிரியில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதேபோல் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, குண்டாறு, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் மழை பதிவாகியது.

    சிவகிரி அருகே தேவிபட்டிணம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 26). மராட்டியத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்த இவர் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்று தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த அவரை மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

    சிவகிரி, வாசுதேவ நல்லூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று சுமார் 2 மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. தண்ணீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் தவித்தனர்.

    ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் காரணமாகவே பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

    தொடர்மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 98.20 அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் ஒரு அடி உயர்ந்து 99.28 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் பிற்பகலில் அணை 100 அடியை எட்டியது.

    பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 87.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 924.063 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 409.65 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கடனாநதி,ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டமும் இன்று தலா ஒரு அடி உயர்ந்தது.

    Next Story
    ×