என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 மாவட்டங்களில் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது அதிகபட்சமாக நாட்றம்பள்ளி ஆலங்காயத்தில் 96 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- திருப்பத்தூர் நகர பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை, அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக பனப்பாக்கத்தில் 54.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 வீடுகள் முழுவதுமாக இடிந்தது. 5 வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்தன. ஒரு மாடு பலியானது.
பாலாறு மற்றும் பொன்னை ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 136 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும் 4 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. மற்ற ஏரிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது அதிகபட்சமாக நாட்றம்பள்ளி ஆலங்காயத்தில் 96 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருப்பத்தூர் நகர பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வந்தவாசி ஜமுனாமரத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன.
சாத்தனூர் அணையில் இருந்து 3500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகர பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குடியாத்தம், திருவலம், பொன்னை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக வேலூர் காட்பாடியில் தெரு சாலைகள் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
தொடர்மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
மழை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் பெருக்கெடுத்து வரலாம் என்பதால் பொதுமக்கள் ஆறு மற்றும் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவண்ணாமலை-26.4, ஆரணி-34, செய்யாறு-37, செங்கம்-32.2, ஜமுனாரமரத்தூர்-65, வந்தவாசி-47.2, போளூர்-26, தண்டராம்பட்டு-8.5, கலசப்பாக்கம்-61.4, சேத்துப்பட்டு-25.7, கீழ்பென்னாத்தூர்-63.6, வெம்பாக்கம்-24.5, திருப்பத்தூர்-78, ஆம்பூர்-27.1, ஆலங்காயம்-96, வாணியம்பாடி-60, நாட்டறம்பள்ளி-96.2, ஆம்பூர் சர்க்கரை ஆலை-68, வேலூர்-17.1, குடியாத்தம்-8.6, மேல்ஆலத்தூர்-13.2, காட்பாடி-5.4, திருவலம்-10.2, பொன்னை-20.2, ராணிப்பேட்டை-28.6, அரக்கோணம்-34.1, மின்னல்-38.6, ஆற்காடு-39.4, காவேரிபாக்கம்-37, பனப்பாக்கம்-54.4, வாலாஜா-19, அம்மூர்-33.2, சோளிங்கர்-23.3, கலவை-25.4.






