என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- அக்கரை, பனையூர், கானாத்தூர், நீலாங்கரை, திருவான்மியூர் பகுதிகளில் சாலை முழுக்க வாகனங்கள் நின்றன.
- சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் பழைய மகாபலிபுரம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னை:
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக கடந்த 31-ந்தேதி இரவு சென்னையைச் சேர்ந்த பலர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், விடுதிகள், மாமல்லபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சென்றனர். அவர்கள் புத்தாண்டை கொண்டாடி விட்டு அங்கேயே தங்கினார்கள்.
புதுச்சேரி, மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களுக்கு நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட சென்றவர்கள் நேற்று மதியத்துக்கு பிறகு கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்னை திரும்பினார்கள்.
இதனால் நேற்று மாலை முதல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதே நேரத்தில் நேற்று பகலில் சென்னையைச் சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். அவர்களும் மாலையில் வீடு திரும்ப தொடங்கினார்கள். இதனால் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களும் கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமானோர் பயணித்தன.
இதனால் ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானாத்தூரில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூருக்கு செல்ல சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் ஆனது. இரவு 7 மணிக்கு பிறகு ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் வாகன ஓட்டிகள் திணறினார்கள்.
அக்கரை, பனையூர், கானாத்தூர், நீலாங்கரை, திருவான்மியூர் பகுதிகளில் சாலை முழுக்க வாகனங்கள் நின்றன. இதேபோல் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் பழைய மகாபலிபுரம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் நிறுத்தப்பட்டிருந்தாலும் ஒரே நேரத்தில் வந்த வாகனங்களால் போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதையடுத்து அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசா ருக்கு உதவினார்கள்.
இது போன்ற பண்டிகை நாட்களில் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






