என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாளவாடியில் பலத்த மழை எதிரொலி- ரோட்டில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
    X

    தாளவாடி-தொட்டகாஜனூர் சாலையில் மரம் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடியில் பலத்த மழை எதிரொலி- ரோட்டில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    • காற்றின் வேகம் தாங்காமல் சாலையோர வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
    • தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. இன்று அதிகாலை தாளவாடியில் இருந்து தொட்ட காஜனூர் செல்லும் சாலையில் பழமையான மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    சாலையில் இருபுறம் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இன்று காலை பள்ளி -கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவிகள், வியாபாரத்துக்கு சென்ற வியாபாரிகள், வேலைக்கு சென்ற பணியாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் நேற்று மாலை சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே பலத்த சூறாவளி காற்றுக்கு சாலையின் குறுக்கே மூங்கில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் தமிழக- கர்நாடக மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    காற்றின் வேகம் தாங்காமல் சாலையோர வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    தமிழக-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து ஆசனூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூங்கில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தாளவாடி- 24, சத்தியமங்கலம் - 6, கொடுமுடி - 6, கோபி - 2.

    Next Story
    ×