என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
சேலம் மாநகரில் நள்ளிரவில் கொட்டிய கனமழை: அதிக பட்சமாக 82.7 மி.மீ. பதிவு
- சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
- மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஏற்காட்டில் கனமழை பெய்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் நிழலை தேடி ஓடினர். மேலும் வாகன ஓட்டிகள் கடும் உஷ்ணத்தால் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பிற்பகல் 3 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன.
சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சேலம் 4 ரோடு, சங்கர் நகர், புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதாகப்பட்டி, ஜங்சன், பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்த படியே சென்றனர்.
இந்தநிலையில் நேற்றிரவு 11 மணியளவில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கன மழையாக கொட்டியது. நள்ளிரவு வரை பெய்த இந்த மழையால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கிச்சிப்பாளையம், நாராயணநகர், பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை, தாதாகாப்பட்டி, நெத்திமேடு, அத்வைத ஆசிரம ரோடு, சங்கர் நகர், சூரமங்கலம், ஜங்சன் உள்பட பல பகுதிகளில் சாக்கடை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஆறாக ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாநகரில் அஸ்தம்பட்டி, பெரமனூர் உள்பட பல பகுதிகளில் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 82.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆனைமடுவு 52, ஓமலூர் 24, கரியகோவில் 5, மேட்டூர் 2.2, பெத்தநாயக்கன்பாளையம் 1.5, ஏற்காடு 1.4, சங்ககிரி 1.3, எடப்பாடி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 171.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.






