என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூர் பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதை படத்தில் காணலாம்.
நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை- கூடலூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
- ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் பகுதியில் பலத்த மழைக்கு தோட்ட தொழிலாளர்களான லீலா, அம்மாமுத்து உள்பட 12 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தொடர் மழையால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் கூடலூர், தேவாலா, சேரம்பாடி மற்றும் பந்தலூரில் பலத்த மழை பெய்தது. மழையால் பாண்டியாறு மற்றும் புண்ணம்புழா மற்றும் மாயார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் அதன் நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. பல்வேறு இடங்களில் நீரோடைகள் தூர்வாராப்படாததால், தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் பகுதியில் பலத்த மழைக்கு தோட்ட தொழிலாளர்களான லீலா, அம்மாமுத்து உள்பட 12 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழையால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டுள்ளது.
இதற்கிடையே தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் கூடலூரில் நடந்தது.
ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் மழைப்பொழிவு அதிகளவில் உள்ளதாலும், காற்றின் வேகம் இருக்கும்பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் போதுமான பொக்லைன் எந்திரம், மணல் மூட்டைகள், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மின்சார வாரியம் சார்பில் மின்கம்பங்கள் அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் போன்ற மின்சாதனங்கள் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்கு தடையின்றி மின் இணைப்பு வழங்க தயாராக இருக்க வேண்டும்.
மேலும் கனமழையின் போது, பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் கூடுதலாக இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பேரிடர் காலத்தில் தூய்மை பணிகள், பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் கருவிகளை கொண்டு வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், கூடலூர் பகுதியில் 23 பகுதிகள் பாதிப்புள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் தங்க 23 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உணவு, குடிநீர்வசதி, மருத்துவ வசதி, மின்வசதி, கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளன என்றார்.






