என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலைப்பகுதிகளில் பலத்த மழை: தரைப்பாலம் மூழ்கி அத்தாணி- சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிப்பு
- புஞ்சைதுறையம்பாளையம், கொண்டையம்பாயைம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்களாபுதூர் வழியாக சுமார் 5 கி.மீட்டர் தூரம் சுற்றி கோபியில் உள்ள பள்ளிக்கு சென்றனர்.
- அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வாகனங்கள் கள்ளிப்பட்டி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதேபோல் டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய கொடிவேரி, டி.ஜி.புதூர் நால்ரோடு, வாணிப்புத்தூர், கொங்கர்பாளையம், டி.என்.பாளையம், பங்களாப்புதூர், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை, அத்தாணி பகுதிகளிலும் நள்ளிரவு 2.30 மணி முதல் இன்று காலை வரை கனமழை விட்டு விட்டு பெய்தது.
இதில் அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் கொண்டையம்பாளையம் ஊராட்சி சந்தை கடையருகில் உள்ள ஜக்கான் காட்டு பள்ளத்தின் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
ஜக்கான் காட்டு பள்ளத்திற்கு எக்கரை, நெல்லிக்காய் திட்டு, எடைகாந்தி உள்ளிட்ட சிற்றோடைகளில் இருந்தும் வேதபாறை பள்ளத்தின் ஒரு பகுதியின் வழியாக வரும் வனப்பகுதியில் பெய்த மழை நீரும் இந்த பள்ளத்திற்கு வருகிறது. இதனால் அத்தாணி- சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புஞ்சைதுறையம்பாளையம், கொண்டையம்பாயைம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்களாபுதூர் வழியாக சுமார் 5 கி.மீட்டர் தூரம் சுற்றி கோபியில் உள்ள பள்ளிக்கு சென்றனர். அதேபோல் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வாகனங்கள் கள்ளிப்பட்டி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கள்ளிப்பட்டி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் இந்த விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியது. நடவு பணிகள் செய்து சில நாட்களே ஆன நிலையில் கள்ளிப்பட்டி மற்றும் கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.






