search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளுவது உறுதியானால் மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம்- மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளுவது உறுதியானால் மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம்- மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை

    • மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவு.
    • விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் துப்புரவாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது. பாதாள சாக்கடைகளில் இறங்கி துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றும் சமயங்களில் விஷவாயு தாக்கி, அவர்கள் பரிதாபமாக இறக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன. துப்புரவு தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கையால் மலம் அள்ளுவது முழுவதுமாக தடுக்கப்படவில்லை. இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசுகளை அறிவுறுத்தி வருகிறது.

    மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதாள சாக்கடைகளில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பது தடுக்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

    எனவே எனது மனுவின் அடிப்படையில் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தவும், துப்புரவு தொழிலாளர்கள் மறுவாழ்வு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் பாதாள சாக்கடைகளில் இறங்கி தொழிலாளர்கள் பணியாற்றுவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த புகைப்படங்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இவை எங்கே எடுக்கப்பட்டவை என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மனுதாரர் வக்கீல், சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எடுக்கப்பட்டவை என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என எச்சரித்தனர்.

    மேலும் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×