என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த கண்டக்டர் சஸ்பெண்டு
- சேலம் எருமாபாளையம் டெப்போவில் இருந்து தடம் எண் 7 என்ற சிறப்பு பஸ் சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு இயக்கப்பட்டது.
- ஆத்தூருக்கு கட்டணமான 36 ரூபாய்க்கு பதிலாக 57 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
சேலம்:
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 400-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில் சேலம் எருமாபாளையம் டெப்போவில் இருந்து தடம் எண் 7 என்ற சிறப்பு பஸ் சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் ஆத்தூருக்கு கட்டணமான 36 ரூபாய்க்கு பதிலாக 57 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதில் பயணித்த ஆத்தூரை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு செல்ல 3 மணி நேரத்திற்கு மேல் ஆனதாகவும் ஆத்தூர் கிளை மேலாளர் வெங்கடேசனிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சேலம்-ஆத்தூர் தடத்தில் 56 கிலோ மீட்டருக்கு 36 ரூபாய் டிக்கெட் என குறிப்பிட்டு இருந்த நிலையில் கண்டக்டர் செங்கோட்டையன் கூடுதல் கட்டணமாக 57 ரூபாய் வசூலித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கண்டக்டர் செங்கோட்டையன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மேலாளர் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனை சஸ்பெண்டு செய்து சேலம் போக்குவரத்து கழக பொது மேலாளர் உத்தரவிட்டார். மேலும் பஸ் மெதுவாக இயக்கப்பட்டது தொடர்பாக டிரைவர் மாரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






