search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்

    • வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • கிறிஸ்துமசுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சந்தைகளில் ஒன்று நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை. இங்கு ஆடுகளுடன் மாடு, கோழி, கருவாடு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொள்வது வழக்கம்.

    ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ. 2 கோடி அளவில் வியாபாரம் நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் விற்பனை இரு மடங்காக அதிகரிக்கும்.

    இந்நிலையில் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமசுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    அவை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கொண்டுவரப்படும் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மட்டுமின்றி ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தில் இருந்து செம்பிலியாங்கிடா கொண்டு வரப்பட்டது. இவை ஜோடிகள் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதேபோல் கன்னி ஆடுகள் ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வியாபாரிகள் ஆடுகளை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் இன்று மேலப்பாளையம் சந்தை களை கட்டி காணப்பட்டது.

    Next Story
    ×