என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாறை குகையில் வைத்திருந்த 10 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்ற கும்பல்- தனிப்படை விசாரணை
- ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது பழங்குடியின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 10 சாமி சிலைகளும் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன்னால் ஆன சிலைகள் ஆகும்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் மலமஞ்சனூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குலதெய்வமான வீரபத்திர சுவாமியை வணங்கி வருகின்றனர்.
மலமஞ்சனூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் அருகில் மலை ஒன்று உள்ளது. இந்த மலை மீதுதான் குருமன்ஸ் இன மக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீரபத்திர சுவாமிக்கு விழா எடுப்பது வழக்கம். இந்த விழாவிற்கான சாமிசிலைகளை அங்குள்ள பாறையின் குகைப் பகுதியில் பத்திரமாக வைத்திருப்பார்கள். மூன்றாண்டுக்கு ஒருமுறை அதை எடுத்து ஆற்றில் நீராட்டி பின்னர் பூஜைக்கு கொண்டு வந்து கொண்டாடுவார்கள். அப்படி இவர்கள் சாமி கும்பிடுவதற்காக பாறை குகையில் 2 அடி உயரமுள்ள வீரபத்திரசாமி, சிவன், பார்வதி போன்ற 10 சாமி சிலைகள்வைத்திருந்தனர்.
இந்த 10 சாமி சிலைகளும் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன்னால் ஆன சிலைகள் ஆகும்.
தற்போது இவர்கள் விழா கொண்டாடுவதற்காக பாறை குகையில் வைத்திருந்த சிலையை எடுக்க சென்ற போது சிலைகளை காணவில்லை.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ஆவுடையான் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
200 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது பழங்குடியின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






