search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் போலி டாக்டர் கைது- 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது அம்பலம்

    • விசாரணையில் ராஜா மருந்தாளுநர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளது தெரியவந்தது.
    • ஊசி மற்றும் கழிவுகளை தொற்று பரவும் வகையிலும், சட்டப்படி அதனை அகற்றாமலும் வைத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையத்தில் போலியாக ஒரு கிளீனிக் செயல்பட்டு வருவதாகவும், அங்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மீது சந்தேகம் இருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையில், திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு மற்றும் நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், அலுவலக கண்காணிப்பாளர் செ.ரமேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட 'நல்லாண்டவர்' என்ற கிளீனிக்கில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு அலோபதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு சிகிச்சை அளித்து வந்த அவிநாசியை சேர்ந்த ராஜா (வயது 44) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா மருந்தாளுநர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளது தெரியவந்தது.

    இதுபோல் ஊசி மற்றும் கழிவுகளை தொற்று பரவும் வகையிலும், சட்டப்படி அதனை அகற்றாமலும் வைத்துள்ளார். இதையடுத்து கிளீனிக்கை அதிகாரிகள் குழு சீல் வைத்தது. இது தொடர்பாக மேல் விசாரணை நடத்த ராஜாவை திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வர உத்தரவிட்டிருந்தனர். அதன்பேரில் ராஜா அங்கு சென்றார்.

    அப்போது கனகராணி தலைமையிலான அதிகாரிகள் கிளீனிக்கின் ஆவணங்கள் மற்றும் பதிவு, ராஜாவின் படிப்பு விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவருக்கு பதிலாக மற்றொருவர் மருந்துகள் விற்பனை செய்து வந்ததும், ராஜா அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும், அதற்கு தகுதியான படிப்பு அவர் படிக்காததும் உறுதியானது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பான அறிக்கை மாவட்ட கலெக்டர் வினீத்திடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலி மருத்துவர் ராஜா மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஊத்துக்குளி காவல்நிலையத்தில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் புகார் அளித்தார். இதையடுத்து ராஜா கைது செய்யப்பட்டார்.

    இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்திருப்பது போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி கூறியதாவது:-

    ராஜா அலோபதி முறையில் சிகிச்சை அளித்துள்ளார். நோயாளிகளுக்கு எழுதிக்கொடுத்த மருந்து சீட்டு உள்ளிட்டவைகளை கைப்பற்றி உள்ளோம். இவை அனைத்தும் முறையாக மருத்துவம் பயின்றவர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல் மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்தி உள்ளார். மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் பாறைக்குழியில் எரித்துள்ளார். இதையடுத்து பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் கிளீனிக் மூடி சீல் வைக்கப்பட்டது.

    அதேபோல் தமிழ்நாடு மருத்துவ நிறுவன சட்டம் 1997-ன் படி அனைத்து மருத்துவமனைகளிலும் (டிஎன்சிஇஏ) எனப்படும் தமிழ்நாடு மருத்துவ நிறுவன சட்டத்துக்கான பதிவு சான்றிதழ், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பார்வையில் படும் படி, அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் வைத்திருக்க வேண்டும். அலோபதி, சித்தா உட்பட அனைத்து விதமான சிகிச்சைக்களுக்கு இந்த சான்று அவசியம். இது இல்லாத மருத்துவமனைகள் மீது பொதுமக்கள் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அதேபோல் அனைத்து மருத்துவமனைகளும் இதனை பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×