search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டை விலை தொடர் சரிவு- பண்ணையாளர்கள் கவலை
    X

    முட்டை விலை தொடர் சரிவு- பண்ணையாளர்கள் கவலை

    • நாமக்கல்லில் இருந்து முட்டையின் ஏற்றுமதி கணிசமாக குறைந்து பல கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
    • தொடர்ந்து முட்டை விலை 30 காசுகள் குறைந்துள்ளதால் பண்ணையாளளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதம் உள்ள முட்டைகள் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வடமாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டை 560 காசுகள் வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 23-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.60 ஆக இருந்தது.

    26-ந்தேதி முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மேலும் 20 காசுகள் குறைந்து முட்டை விலை 430 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இன்றும் அதே விலை நீடிக்கிறது. தொடர்ந்து முட்டை விலை 30 காசுகள் குறைந்துள்ளதால் பண்ணையாளளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முட்டை விலை சரிவுக்கான காரணம் குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:- நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 1 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது . கேராளாவில் நாளை (29-ந் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த சில நாட்களாக கேரளாவில் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து முட்டையின் ஏற்றுமதி கணிசமாக குறைந்து பல கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. ஓணம் பண்டிகை முடிந்ததும் மீண்டும் ஏற்றுமதி உயரும் போது முட்டை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

    இதேபோல் பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.110 ஆக நீடிக்கிறது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பிராய்லர் கோழி மற்றும் முட்டை கோழி விலைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×