என் மலர்
உள்ளூர் செய்திகள்

எடப்பாடி அருகே திருப்பதி கோவிலுக்கு சென்றவர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
- கொள்ளை சம்பவம் நிகழ்ந்த வீட்டில் பதிவாகியுள்ள தடயங்களை தடையவியில் நிபுணர்கள் சேகரித்து வருகின்றனர்.
- கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி:
எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சின்னமணலி, நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேலு மகன் சங்கரநாராயணன் (வயது 33). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்த அவர், தொடர்ந்து அங்கிருந்து கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் சிலர் நேற்று இரவு சங்கரநாராயணனின் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு பீரோவில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இன்று காலை வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சங்கரநாராயணனுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் பார்வையிட்டனர். பீரோவில் வைத்து சென்று இருந்த 11 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி செயின் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.
மேலும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்த வீட்டில் பதிவாகியுள்ள தடயங்களை தடையவியில் நிபுணர்கள் சேகரித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






