என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீபாவளி பண்டிகை : அரசு பஸ்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க 20-ந்தேதிக்கும் முன்பதிவு
- தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 4,218 சிறப்பு பஸ்களும் சேர்த்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக 16,888 சிறப்பு பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 4,218 சிறப்பு பஸ்களும் சேர்த்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களுக்கான இருக்கை முழுவதும் நிரம்பி விட்டன. இதனால் பிற போக்குவரத்து கழக பஸ்களுக்கு தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 3 நாட்களுக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்திற்கு காத்து இருக்கின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவு முன்பதிவு நடந்து வருகிறது. மக்கள் ஆன்லைன் வழியாக விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
வருகிற 21, 22, 23 ஆகிய நாட்களுக்கு அரசு பஸ்களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டதால் மக்கள் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றி வருகிறார்கள். ஆம்னி பஸ்களில் மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய விரும்பாததால் 20-ந்தேதி (வியாழக்கிழமை) பயணத்திற்கு முன்பதிவு செய்கின்றனர்.
குடும்பத்தோடு ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஆவதால் அரசு பஸ்களில் குறைவான கட்டணத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அரசு பஸ்களை நோக்கி மக்கள் வருவதை அறிந்து போக்குவரத்து கழகங்கள் ஒருநாள் முன்னதாக புறப்படும் வகையில் முன்பதிவை தொடங்கி உள்ளது.
தீபாவளிக்கு 4 நாட்கள் முன்பே சொந்த ஊர் புறப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 20-ந்தேதி பயணத்திற்கு மக்கள் அதிகளவில் தற்போது முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரையில் 20 ஆயிரம் பேர் வியாழக்கிழமை பயணத்திற்கு முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
சென்னை மற்றும் பிறநகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. முன்பதிவு 2 மடங்கு அதிகரித்து உள்ளது. அதனால் பயணத்தை மேலும் ஒருநாள் முன்னதாக தள்ளி 20-ந்தேதிக்கு புறப்படுகிறார்கள்.
சென்னையில் இருந்து 20-ந்தேதி செல்ல 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பண்டிகை முடிந்து சென்னை திரும்பவும் முன்பதிவு விறுவிறுப்பாக உள்ளது. 25, 26-ந்தேதி வரை முன்பதிவு செய்யப்படுகிறது.
விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் விழுப்புரம், சேலம்,கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் உள்ள பஸ்களுக்கு தற்போது முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.