search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணம் அருகே விநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினர் மோதல்
    X

    மரக்காணம் அருகே விநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினர் மோதல்

    • இருதரப்பினரும் இன்று விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கூனிமேடு ஊராட்சி. இங்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள விநாயகர் கோவிலில் ஒரு பிரிவினர் ஆண்டுதோறும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதும், அதனைத் தொடர்ந்து விநாயகர் கோவிலுக்கு திருவிழா நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இதேபோல் இவர்கள் வைக்கும் விநாயகர் சிலைக்கு அருகில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினரும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினரும் வழக்கம்போல் தாங்கள் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் கொட்டகை அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதிக் கொள்ளும் அபாயம் உருவானது.

    இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து முறையாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யுமாறு கூறினர்.

    ஆனால் போலீசாரின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் இன்று விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.

    இந்த தடையை மீறி யாரும் அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    மேலும் இது சம்பந்தமாக இரு தரப்பையும் அழைத்து மரக்காணம் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தவும் போலீஸ் சார்பில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×