என் மலர்
உள்ளூர் செய்திகள்

பவானி அருகே வணிக வரித்துறை ஊழியர் தற்கொலை
- கடந்த வாரம் மருதாச்சலம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மயங்கி கீழே விழுந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம், பாரதி நகர் அருளரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மருதாச்சலம் (47). இவர் ஈரோட்டில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தமயந்தி. இவர்களுக்கு கோகுல பிரியன் என்ற மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக மருதாச்சலத்திற்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் மருதாச்சலம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயத்துக்கு தையல் போட்டு கொண்டு வீடு திரும்பினார்.
சம்பவத்தன்று தமயந்தி தனது மகன் கோகுல பிரியனுடன் ஈரோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தார். பின்னர் இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது மருதாச்சலம் இரவு 7 மணி அளவில் தனது அறைக்குள் சென்றார். அப்போது தமயந்தியும் அவரது மகனும் மருதாச்சலம் தூங்கச் செல்வதாக நினைத்தனர்.
பின்னர் அரை மணி நேரம் கழித்து அவர்கள் கதவை திறந்த போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மருதாச்சலம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தமயந்தி மற்றும் அவரது மகன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் மருதாச்சலத்தை மீட்டு ஆட்டோ மூலம் காலிங்கராயன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருதாசலத்தை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தமயந்தி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






