search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் கொடை விழாவில் தகராறு: தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடியபோது கிணற்றில் விழுந்து கல்லூரி மாணவர் பலி
    X

    கோவில் கொடை விழாவில் தகராறு: தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடியபோது கிணற்றில் விழுந்து கல்லூரி மாணவர் பலி

    • வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் உள்ள கோவில் கொடை விழாவிற்கு பிரதீப் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
    • அப்போது அங்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும், பிரதீப் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரதீப்(வயது 20). இவர் மேலநீலிதநல்லூரில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    நேற்று வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் உள்ள கோவில் கொடை விழாவிற்கு பிரதீப் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும், பிரதீப் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே பிரதீப் மற்றம் அவரது நண்பர்களை எதிர்தரப்பினர் தாக்க முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க பிரதீப் தரப்பினர் ஓடியதாகவும் கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பிரதீப் மற்றும் அவரது நண்பர்களை துரத்தியவர்களில் சுரண்டையை சேர்ந்த போலீஸ்காரர் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் சொந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் திரண்டு உள்ளதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×