search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரத்யேக செயலி மூலம் பேசிய முபின்- வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பு
    X

    பிரத்யேக செயலி மூலம் பேசிய முபின்- வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பு

    • கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.
    • முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.

    போலீஸ் விசாரணையில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இறந்த முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்தனர்.

    முபின் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயனங்கள், ஐ.எஸ். ஆதரவு வாசகங்கள் அடங்கிய பொருட்கள், செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கார் வெடிப்பு வழக்கினை தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த முபின் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    கோவில்கள் மற்றும் அங்கு நடக்கும் உருவ வழிபாடுகள் மீது முபினுக்கு வெறுப்புணர்வு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டு வந்த தகவலையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    2019-ம் ஆண்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபின் வீட்டில் சோதனை நடத்தினர். அதன்பின்னர் அவரை தொடர்ந்து கண்காணிக்க உளவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. உளவுத்துறையினரும் அவரை கண்காணித்து வந்தனர்.

    ஆனால் அவர்களின் கண்காணிப்பையும் மீறி அடுத்தடுத்து முபின் 3 வீடுகளுக்கு மாறியதும், இதை மத்திய, மாநில உளவுத்துறையினர் கண்காணிக்க தவறியதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் போலீசாரின் தொடர் விசாரணையில், முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்கு பிரத்யேகமாக செயலி ஒன்றை பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

    கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.

    தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது, முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்காக ஐ.எம்.ஓ. என்ற பிரத்யேக செயலியை பயன்படுத்தியது தெரியவந்தது.

    இந்த செயலியை பயன்படுத்தி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்களுடனும் பேசலாம். மேலும் செல்போனில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பேசினால் ஏதாவது ஒரு வகையில் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதை அறிந்து ஐ.எம்.ஓ. எனப்படும் பிரத்யேக செயலியை பயன்படுத்திருக்கலாம்.

    இந்த செயலியில் வீடியோ அழைப்பு, வாய்ஸ் கால் எனப்படும் குரல்பதிவு அழைப்பு, சாட் எனப்படும் எழுத்து பரிமாற்றம் மூலமாகவும் பேச முடியும்.

    இதில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் சாட்களை பயன்படுத்தாமல் வீடியோ, வாய்ஸ் கால் அழைப்புகள் மூலம் பேசி வந்துள்ளனர். இவற்றை ரெக்கார்டு செய்ய முடியாது. மேலும் பேசியவுடன் அந்த தகவல்களை உடனுக்குடன் அழித்தும் உள்ளனர்.

    மேலும் முபின் ஐ.எ.ம்.ஓ. செயலி மூலம் வெளிநாட்டு நபர்களுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் முபினை மூளைச்சலவை செய்தததுடன், அவருக்கு வெடிபொருட்கள் வாங்க பணம் உதவி செய்திருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, வாட்ஸ்அப் அழைப்பு, ஐ.எம்.ஓ. போன்ற செயலிகளில் இருதரப்பினரின் ரகசியம் காக்கப்படும் என்பதாலும், போலீசாரால் கண்காணிக்க முடியாது என்பதாலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

    இதுபோன்ற செயலிகளின் தலைமையை தொடர்பு கொண்டு கேட்டாலும் தகவல்கள் எளிதாக கிடைப்பதில்லை. சட்டவிரோத செயல்களை தடுக்க இதுபோன்ற செயலிகளின் பயன்பாட்டை கண்காணிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது ஒன்றே தீர்வாகும் என்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் யாரெல்லாம் இதுவரை ஆன்லைனில் வெடி பொருட்கள் வாங்கி உள்ளனர் என்ற பட்டியலை தயாரிக்கும் பணியில் போலீசார் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைதான 6 பேரும் நாளை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    இதற்காக இன்று 6 பேரும் கோவை மத்திய ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். நாளை காலை என்.ஐ.ஏ. கோர்ட்டில் 6 பேரும் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

    அதன்பின்னர் அவர்கள் 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. கோர்ட்டில் அனுமதி பெற்று கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×