search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கார் குண்டு வெடிப்பு: மேலும் சிலர் கைதாக வாய்ப்பு
    X

    கோவை கார் குண்டு வெடிப்பு: மேலும் சிலர் கைதாக வாய்ப்பு

    • 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.
    • இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்தார்.

    காரில் சிலிண்டர், ஆணி உள்ளிட்ட பொருட்களை நிரப்பி தீபாவளியை முன்னிட்டு கோவையில் நாச வேலையை அரங்கேற்ற முபின் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    தற்போது இந்த வழக்கினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகள் என தமிழகம் முழுவதும் 43 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது பலரது வீடுகளில் இருந்து செல்போன், டிஜிட்டல் கருவிகள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.

    தற்போது கைப்பற்றிய ஆவணங்களில் உள்ள விவரங்களின் முழுமையான தகவல்களை சேகரிக்கும் பணியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக இந்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர்களிடம் இந்த சம்பவத்தில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டார்களா ? வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்கும் அனுமதி கேட்க உள்ளனர்.

    6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.

    அப்போது இந்த வழக்கில் இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×